நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6-லட்சம் பணியிடங்களைநிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, வழங்கவேண்டும்.
ஒப்பந்த முறை, அவுட்சோர்சிங் முறைகளை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், எம் ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற ஊழியர்கள், வனபாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை தொகுப்பூதியம் பெற்றுவருபவர்களை நிரந்தரப்படுத்தி காலமுறைஊதியம் வழங்கவேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மூலமாக செயல்படுத்திட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் பா.ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநிலச் செயலாளர் சா.டானியல் ஜெயசிங் துவக்கவுரையாற்றினார். நாகப்பட்டினம் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.இராஜூ மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ப.அந்துவன்சேரல் சிறப்புரையாற்றினார்.
கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி நிறைவுரையாற்றினார்.
அவர் தனது நிறைவுரையில் ” தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நியாயமான, தமிழ்நாடு முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசுவதோடு, தேவைப்பட்டால் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்தும் முறையிடுவேன் ” என்று உறுதியளித்தார்.
இறுதியாக மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா நன்றியுரையாற்றினார். 250 பெண் ஊழியர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.