நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்
கோடைவிடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தொற்று குறைவாக இருந்ததால் முககவசம அணிவது குறைந்து வந்தது.தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை முதல் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டுமென சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெற்றோர்களுக்கு குறுந் தகவல்கள் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. அதேசமயம் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்துமா என்பது குறித்து அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அப்படியே உள்ளன. எனவே, பள்ளி செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவ-மாணவிகள், கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் திறக்கும் சூழ்நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா நோய்த்தொற்றும் உயர்ந்து வருவதால் தூய்மைப் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.