நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானாம்பிகை தெருவை சேர்ந்த 10 பேர் தீபம் பார்ப்பதற்காக திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளனர். மினி சரக்கு வாகனம் மூலம் சென்ற இவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.
அப்போது மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிமீது பின்னால் வந்து கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது மேலும் இந்த வாகனத்திற்கு பின்னால் வந்த மற்றொரு ஈச்சர் வேன் மினி லாரி மீது மோதியதால் நடுவில் சிக்கி கொண்ட மினிலாரி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழிச்சலூரை சேர்ந்த சந்திரசேகர் (70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33) மற்றும் சேகர் (55) உள்ளிட்ட ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (27), சேகர் (37), அய்யனார் (35), ரவி (26) டாட்டா ஏசி பயணம் செய்த நான்கு பேர் மற்றும் லாரி ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த கோர விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.