நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்..! தேனியில் ஓபிஎஸ் வீடு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வீடு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இரண்டாக பிளவுபட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வரும் நிலையில் தான் சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தலைமை மீது அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அவ்வப்போது அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற முழக்கமும், சசிகலா தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தநிலையில் வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அ தி மு க வின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரியகுளம் பகுதியில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போஸ்டர் ஒட்டிய நபரான சுரேஷ் என்பவரை விசாரித்தபோது அவர் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாகவும், தற்போது அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண ஒரு தொண்டனாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டத்தில் சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வீடு மற்றும் அலுவலகம் அருகே இபிஎஸ்க்கு ஆதராவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.