BREAKING NEWS

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மட்டும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.

 

இந்நிலையில், வைகை பாசன மடை சங்க தேர்தல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அதன் பதவி காலம் முடிந்து விட்டதால் தலைவர் மற்றும் 4 உறுப்பினருக்கான தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

 

இதற்காக கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கி மார்ச் 2-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மார்ச் 3-தேதி வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு, 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பு மனு செய்யும் விண்ணப்பங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை தேர்தலில் போட்டியிடும் விவசாயிகளுக்கு வழங்காததால் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் கடந்த 24.02.2022 வெள்ளிக்கிழமை நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

இந்நிலையில் நேற்று திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதன்படி வைகைப் பாசன மடை சங்க தேர்தலில் அதிமுக சார்பாக நிலக்கோட்டை (மேற்கு) ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துலிங்கபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி (56) என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலரும், நிலக்கோட்டை தாசில்தாருமான தனுஷ்கோடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

தலைவர் பதவிக்கு அதிமுக மாற்று வேட்பாளராக ராமராஜபுரத்தை சேர்ந்த சௌந்திரபாண்டி (55) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், உறுப்பினர் பதவிகளுக்கு, அதிமுக சார்பாக, மட்டப்பாறையைச் சேர்ந்த மொக்கராஜ் (67) சித்தர்கள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (69) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தியாளர் ம.ராஜா.

CATEGORIES
TAGS