நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.
![நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில். நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-22-at-3.21.25-PM-e1669111323212.jpeg)
நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறைக்கு 2 நாட்கள் கெடு விதித்து ஊர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி இருந்தது.
இந்நிலையில் நெல்லை பேட்டை பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து அங்கு பணி செய்து வருகிறார். இரவு பணிக்காக நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது நெல்லை தொழிற்பேட்டை வளாகத்தில் நம்பியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நம்பி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தீவிமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து நடுக்கல்லூர் பகுதியில் உடலை வாங்க மறுத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் 500 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடுக்கல்லூர் பகுதியில் உள்ள 2 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடையம்,முக்கூடல், அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதன்பின்னர் காவல்துறைக்கு இரண்டு நாள் கெடு விதித்த ஊர் பொதுமக்கள், கொலையை செய்ய தூண்டிய நபர்களை கைது செய்ய வேண்டும், கொலையான நம்பிராஜனின் கர்பிணி மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.
கடந்த வாரம் சீவலப்பேரியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது நெல்லையில் மக்களிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.