பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வியாபரிகள். கடும் கோபத்துடன் கடையை இழுத்து மூடிய மேயர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் டீ கடை , பெட்டிக்கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வாடகை அடிப்படையில் வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் தங்களுக்கு வாடகைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி பயணிகள் பயன்பாட்டிற்கு உள்ள நிற்கும் இடம் , நடைபாதை ஆகிய இடங்களில் தங்கள் கடைகளின் ஸ்டால் மற்றும் வியாபார பொருட்களை கொண்டு ஆக்கிரமித்து வந்தனர்.
இதனால் பேருந்துநிலையத்திற்குள் வரும் பள்ளி , கல்லுரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் அவ்விடங்களில் அதிரடியாக ஆய்வினை மேற்கொண்டார்.
அப்போது வியாபரிகள் அதிகப்படியான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பயணிகளுக்கு இடையூறு செய்வதைக் கண்டு ஆத்திரமடைந்த மேயர் ஒரு கடையின் சட்டரை தானே இழுத்து மூடியதுடன் , உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நிரந்தரமாக கடையை பூட்ட வேண்டிவரும் என கடுமையாக எச்சரித்தார்.
மேலும் நாளைக்குள் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும் எனவும் இல்லையெனில் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.