பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு பகுதி நேர ஓவிய ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் . ஓவிய ஆசிரியரான இவர் ஓவியத்தை கற்றுத்தருவது மட்டுமல்லாமல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியம் சார்ந்த மற்ற கலைகளையும் கற்றுத்தந்து அசத்தி வருகிறார் . குறிப்பாக மணல் சிற்பம், களிமண் சிற்பம் , மெழுகுசிற்பம் ஆகியவற்றை பல்வேறு வடிவங்களில் கலைநயத்துடன் வடிவமைக்க கற்றுத்தருகிறார்.
மேலும் ஓவியங்களில் வாட்டர்ஓவியம் , ஆயல்ஓவியம் , மெழுகுஓவியம் , பென்சில்ஓவியம் ஆகியவற்றையும் தொழில்நுட்பத்துடன் எளிதில் பழகும்வண்ணம் கற்றுத்தருகிறார். மேலும் பள்ளியில் நடைபெற்றுவரும் அனைத்து கலைநிகழ்ச்சிகளுக்கும் தானே கலைப் பொருட்கள் அனைத்தையும் செய்து தருகிறார்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தெர்மாகோல் , அட்டை , கம்பிவலை , ஆகியவை கொண்டு பல்வேறு கலைவடிவ பொருட்களை செய்து தருகிறார் . குறிப்பாக மாட்டுவண்டி , சிவலிங்கம் , மேளதாளம் , காவடி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை வித்தியாசமான கலை அம்சத்துடன் நேர்த்தியாக வடிவமைத்து கற்றுத்தருகிறார்.
இவற்றிக்கெல்லாம் உச்சகட்டமாக சக்கம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்றுவிளங்கும் பழமைவாய்ந்த முத்துமாரியன் கோவிலின் மாதிரியை தத்ருபமாக வடிவமைத்துள்ளார் . பள்ளிநேரம் முடிந்து கடந்த மூன்றுமாத காலமாக இரவில் பணிசெய்து ஆர்வமுள்ள மாணவர்களையும் அழைத்து அவர்களுக்கும் கற்றுத்தந்து கோயில் மாதிரியே மிகத் தத்ருபமாக உருவாக்கியுள்ளார்.
பள்ளியிலேயே ஓவியத்திறனும் ஆர்வம் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து கவின் கலைக்கூடம் என்ற அமைப்பையும் உருவாக்கி மாணவர்களின் கலைத்திறனை நுண்ணறிவையும் வளர்த்துவருகிறார் . இவரது சேவைச்செயல் மாவட்டஆட்சியர், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள கலை திருவிழாவில் ஏற்கனவே நடந்த முடிந்த 63 போட்டிகளில் சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று முப்பதுக்கும் மேற்பட்டோர் வட்டார அளவில் தேர்வு பெற்றுள்ளனர் . மேலும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கலைத்திருவிழா போட்டிகளில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலேயே அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பது இப்பள்ளிக்கும் பெருமையை பெற்றுத்தந்துள்ளது.
இவ்வளவு திறமையும் தகுதியும் அர்ப்பணிப்பு உணர்வும் மாணவ மாணவிகளுக்கு கற்றுத்தரும் கடமை உணர்ச்சியும் கொண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்யும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் பாலமுருகனை பணிநிரந்தரம் செய்து முழுநேர ஆசிரியர் ஆக்கவேண்டும் என்பதே இப்பள்ளியின் தலைமைஆசிரியர் ஜான்சன் முதல் பெற்றோர் உள்ளிட்ட கிராமமக்கள் வரையிலான அனைத்து தரப்பினரின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது .