BREAKING NEWS

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி  வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி   வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு அருவியில் குறிக்க அனுமதித்ததால் அந்த வாகனங்களை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி 1960 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

இந்தப் பழைய குற்றாலம் அருவி சுமார் 45 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதார வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வனத்துறையினர் தன்னிச்சையாக பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் சாலையில் சோதனைச் சாவடி அமைத்து அருவிக்கு செல்லும் வாகனங்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தி அனைலரையும் நடந்து தான் செல்ல வேண்டும் என்றனர்.

மேலும் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் குளித்து வந்த பழைய குற்றாலம் அருவியில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையில் மட்டுமே குளிக்க அனுமதிப்போம் என்று சொல்லியதோடு மாலை 6 மணிக்கு மேல் அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையில் தற்காலிக பணியாளர்களாக வேலை புரியும் வேட்டை தடுப்பு காவலர்கள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை தரக்குறைவாக பேசி, அடித்து விரட்டி வந்தனர்.

இந்நிலையில் 6:00 மணிக்கு பொதுமக்களை எல்லாம் அருவிப்பகுதியை விட்டு விரட்டி விட்டு இரவு 8 மணிக்கு மேல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனத்திற்கு ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்து வந்துள்ளனர்.

இது பற்றி பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் நேற்று இரவு சுமார் 8.30 மணிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி சுடலையாண்டி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தி.உதய கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வேலுமயில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.எஸ்.கிட்டப்பா விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங் ஆகியோர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் பழைய குற்றாலம் அருவிப்பகுதிக்கு சென்றனர் அப்போது அங்கு சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றது

அவை அனைத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வாகன ஓட்டிகளிடம் விசாரித்த போது ஒவ்வொரு வாகனத்திற்கும் 2000 ரூபாய் வனத்துறையினர் பெற்றுக் கொண்டு எங்களை உள்ளே அனுமதித்ததாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவிலேயே பொதுமக்களும் போராட்டக் குழுவினரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அருவிப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம்.

இந்த இரவு நேரத்தில் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் வாகனத்தில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது தொடர்பாக ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தி.உதய கிருஷ்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் வேலு மயில், சிபிஐ தாலுகா செயலாளர் எம்.எஸ்.கிட்டப்பா, விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங், ஆகியோர்

பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது பழைய குற்றாலம் அருவியில் 65 ஆண்டுகளாக பொதுமக்கள் 24 மணி நேரமும் குளித்தது போல் தொடர்ந்து பொதுமக்களை இரவும் பகலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் பழைய குற்றாலத்தில் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு பழைய குற்றாலம் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனை சாவடியை அப்புறப்படுத்த வேண்டும். இனி பழைய குற்றாலத்தில் எந்த வகையிலும் வனத்துறையினர் தலையீடு இருக்கக்கூடாது.

இதில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் வரும் ஆகஸ்ட் 15 எங்கள் பகுதியில் அனைத்து கிராமங்களிலும் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதோடு உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட போகிறோம்.

அடுத்த கட்டமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி தடையை மீறி பழைய குற்றாலம் அருவியில் குளிக்கும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS