BREAKING NEWS

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் தேவதையான பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் திருவிழா தொடங்கியது. 11 நாட்களாக நடந்து வந்த திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. ரிஷப வாகனம், பூப்பல்லக்கு, குடைச் சப்பரம் மற்றும் தண்டியல் சப்பரங்களில் அம்மன் வீதி உலா மற்றும் வில்லிசை, ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

 

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு வளையல் அலங்காரம், எலுமிச்சை அலங்காரம், வேப்பிலை அலங்காரம் செய்விக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர்.

அதிகாலை 2 மணி முதல் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூச்சப்பரத்தில் சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. சுமார் 6 மணியளவில் சப்பரம் நடுத்தெரு, வடக்குத்தெரு வழியாக பூக்குழி திடலுக்கு வந்தது.

 

 

சப்பரத்தின் பின் வரிசையாக வந்த பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

மேலும் திருவிழாவின் சிறப்பு அம்சமாக கரகம், அக்கினிச்சட்டி, ஆயிரங்கண் பானை சுமந்தும் 6 முதல் 7 அடி 8 அடி வரை அலகு குத்தியும் நடனமாடியபடி ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி நேர்த்திகடனை நிறைவேற்றினார்கள்.

செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.

CATEGORIES
TAGS