பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவரும் மதுவுக்கும், கள்ளச்சாராயத்திற்கும், டாஸ்மாக் விற்பனைக்கும் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், கள்ளச் சாராயத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், திமுக அரசு பதவி விலக வலியுறுத்தியும்,
சாராயம் விற்றவருக்கும் நிவாரண தொகை வழங்கியதை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த கனிமொழி எம்பியை காணவில்லை எனக் கோரியும், டாஸ்மாக்கால் பெண்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி வருவதாகவும், ஆட்சியை அண்ணாமலையிடம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.