பாலமேடு அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியல்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணிக்கம்பட்டி – ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த வழியாக அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி கிராம பொதுமக்கள் புதிய தார்சாலை அமைத்து தரக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.