பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் அவரது தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தனது மகன் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து வருவதாகவும்,
இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுத்தான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றவன் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது ஆனால் அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை.
தனது மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது அவனது இழப்பு எங்கள் குடும்பத்தில் பேரிடியாக உள்ளது எனவே எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
முன்னதாக தனது மகனின் படத்தைப் பார்த்து கதறி அழுத அவரது தாயார் தன் மகனைக் குத்திய தனக்கன்குளத்தை சேர்ந்த கருப்பு கோவில் காளை தற்பொழுது வரை உணவு உண்ணாமல் இருப்பதாகவும் அந்த மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தை வந்து நேரில் சந்திப்பதாகவும் கூறி உருக்கத்துடன் கண்ணீர் மல்க கதறி அழுதார்.