மயிலாடுதுறையில் 10ஆம் தேதி நடைபெறும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ – மாணவியருக்கு விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ் கனவு நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கல்லூரி அளவில் மாபெறும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டத்தில் 10.03.2023 ஆம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பேசியதாவது,
நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் மாபெரும் தமிழ்க் கனவு எனும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு வருகிற மார்ச் 10ஆம் தேதி செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளன.
கேள்வியின் நாயகன் – நாயகி விருது புத்தக கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், வேலைவாய்ப்பு, உயர் கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன் பெறுதல், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
கல்லூரி மாணவ – மாணவிகளின் சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி ஆகிய 2 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சொற்பொழிவிற்கு பின் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி ஆகிய 2 விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ – மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் அவர்கள், ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.அர.நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் வ.யுரேகா (மயிலாடுதுறை), உ.அர்ச்சனா (சீர்காழி) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.