தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை
மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர. இரா.யோகுதாஸ்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஜோதிவேல். இவர் குத்தகைக்கு எடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சொர்ணா செப் எனப்படும் மோட்டா ரக நெல்லை பயிரிட முடிவு செய்தார்.
அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செம்பனார்கோவில் பகுதியில் இயங்கி வரும் ( கணபதி ஏஜென்சிஸ்) தனியார் விதை நெல் விற்பனை கடையில் சொர்ணா செப் விதை நெல் 30 கிலோ கொண்ட 6 மூட்டைகள் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து இரண்டு ஏக்கர் நேரடி விதைப்பும், இரண்டு ஏக்கரில் நடவு முறையிலும் சம்பா சாகுபடி துவங்கியுள்ளார்.
145 நாட்கள் அறுவடை பருவம் கொண்ட இந்த பயிர்கள் 110 நாட்களுக்கு பின்னரே நெல்மணிகள் உருவாக துவங்குவது வழக்கம். ஆனால் ஜோதிவேல் பயிரிட்ட 80 நாட்களிலேயே அவரது நிலத்தின் சில பகுதிகளில் நெல்மணிகள் முளைக்கத் துவங்கியுள்ளது.
மேலும் பல்வேறு வகையான நெற்பயிர்களும் முளைக்கத் துவங்கியதால் ஜோதிவேல் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பாதிப்பு குறித்து வேளாண் துறையை அணுகி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இவரது வயலில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட விதை பரிசோதனை இயக்குனர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விதை பரிசோதனை ஆய்வாளர் பயிரிடப்பட்ட விதை நெல்லில் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ததுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் பாதிப்பு குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றுள்ளனர்.
ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜோதிவேல் குற்றம்சாட்டுகிறார். தற்பொழுது 100 நாட்களை கடந்த நிலையில் வயலின் ஒரு பகுதியில் நெல்மணிகள் முற்றியும், அதன் அருகே புதிய நெல்மணிகள் துவங்கும் நிலையிலும், மறுபுறம் நெல்மணிகளே இல்லாத வெறும் பயிர்களும் மாறி மாறி காட்சியளிக்கிறது.
மேலும் கருப்பு கவுனி உள்ளிட்ட அரிய வகை நெற்பயிர்களும் ஆங்காங்கே முளைத்துள்ளது. இதனால் முற்றிய நெல் மணிகளை அறுவடை செய்ய முடியாமலும், எஞ்சிய பயிரை காப்பாற்ற உரங்கள் இட முடியாமலும் விவசாயி ஜோதிவேல் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
எஞ்சிய பயிற்களை அறுவடை செய்தாலும் பல ரக நெல்லை எதற்கும் பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ முடியாது என்பதால் ஒருபோக சாகுபடியையும் இழந்து நிற்பதாக கவலை தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் பாதிக்கபடாமல் தடுக்க கலப்பபட விதை நெல் உற்பத்தி செய்த தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயி ஜோதிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.