மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே உடைந்த நிலையில் செல்போன் கிடந்தது. இறந்து கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் யார் என்பது தெரிய வந்தது.
அவர் விருதுநகர் மாவட்டம் பிள்ளையார் தொட்டியாங்குளம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி (வயது 24) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னை திருவொற்றியூரில் தங்கி ஆவடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இவர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்துள்ளார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் உள்ள தனது நண்பர்களிடம் தாய்மாமா உக்கிரபாண்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது செவ்வாய்க்கிழமை இரவு வள்ளிமலைக்கு வந்துள்ளார். இரவில் கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டதால் அன்று இரவு கோவில் அருகே தங்கியுள்ளார் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணி அளவில் கோவில் தரிசனத்திற்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து மேல்பாடி போலீசார் கூறுகையில் பால்பாண்டி கடந்த சில நாட்களாக அடிக்கடி கோவில்களுக்கு சென்று வந்துள்ளார் அதேபோல் வள்ளிமலை கோவிலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்திருக்கிறார் அப்போது கோவில் நடை சாத்தப்பட்டதால் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணி அளவில் சுற்றுப்புற படிக்கட்டு வழியாக சென்று மூலவர் கோபுர உச்சிக்கு சென்று அமர முயற்சித்துள்ளார் இதில் நிலை தடுமாறி பாறை மீது விழுந்து தலையில் அடிபட்டு இறந்துள்ளார்.
அவரது செல்போன் உடைந்த நிலையில் உள்ளதால் அதனை டெக்னீசியன்களிடம் வழங்கி அதை சரிசெய்து விசாரணை நடத்தப்படும். அதில் அவர் யார் யாரிடம் கடைசியாக பேசினார், எதற்காக கோபுரத்தின் மீது ஏறினார் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்த மேல்பாடி போலீசார், வேலூர் அரசு மருத்துவமனையில் பால்பாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.