BREAKING NEWS

மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு.

மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

 

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் 15 அடி உயரம், 6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2020-ல் ஏற்பட்ட புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

 

 

இந்நிலையில் மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 20 அடி உயரத்தில் 15 அடி அகலமுடன் கூடுதலாக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ. 190 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி துறைமுக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 

 

இந்நிலையில் 9-ஆம் தேதி இரவு கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி மீனவ துறைமுக தூண்டில் வளைவு சேதமடைந்தது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதை கடல் சீற்றம் காரணமாக 10 அடியில் இருந்து 15 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கியுள்ளது.

 

 

கருங்கல்லால் ஆன தடுப்பு சுவரில் மண் கொண்டு நிரப்பப்பட்டு மேலே கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் அலை வேகத்தில் கருங்கல்லில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சமதளத்தில் இருந்த கான்கிரீட் பாதையானது உள்வாங்கியுள்ளது.

 

மேல்மட்ட விளிம்பு பகுதிகள் கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் சரிவர கண்காணிக்காத காரணத்தால் கட்டுமான பணியில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மீனவர் கிராம மக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவில் சேதமடைந்த பகுதிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )