மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் இருக்கைகள். மணிக்கணக்காக காத்திருந்தும் மனம் இறங்காத அதிகாரிகள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து அடையாள அட்டை பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை தோறும் வருகின்றனர்.
இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுக்களை கொடுக்கும் பொதுமக்கள் வெளியே காத்திருக்கக் கூடாது என்று கூறி உள்ளே அமர்ந்திருக்கும் அதிகாரிகளின் இருக்கைகளை காலி செய்து விட்டு பொதுமக்களை அமர வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் வயது முதிர்ந்த பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பலதரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்ட அரங்கு முழுவதும் இருக்கைகள் காலியாக இருந்தும் அரங்கின் வெளியே நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருந்து தடியை ஊன்றிக் கொண்டு நின்று கொண்டும் ஒரு சிலர் நிற்க முடியாமல் ஆங்காங்கே நாற்காலி இல்லாமல் தரையில் அமர்ந்து கொண்டும் அவதி உற்றனர்.
கூட்ட அரங்கில் உள்ள இருக்கையை கொடுக்கா விட்டாலும் குறைந்தபட்சம் வெளியே பிளாஸ்டிக் இருக்கையாவது துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வில்லையே என வயதான பாட்டிகள் மனக்குமுறலோடு காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியரின் துரிதமான நடவடிக்கையை பின்பற்றாத துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தனம் காட்டி மனமிரங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செய்தியாளர் சுரேஷ்குமார்.