மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வினோத் என்பவரின் குடும்பத்தினரை ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு காணும்படி ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனிடையே வெகு நாட்கள் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையில் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரடியாக வந்து மீனவர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து குற்றம் சாட்டப்படும் நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர் தற்காலிகமாக தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.