முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய ஆக்கிரமைப்பை அகற்றினாலே போதுமானதாக உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படும் விளை நிலங்களை அழித்தால்,
பொக்லின் இயந்திரங்கள் முன் படுத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டாவது விளை நிலங்களை பாதுகாப்போம் என தஞ்சை விவசாயிகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மா, பலா, வாழை என முக்கனிகளும் நெல் வெற்றிலை காய்கறி கீரை வகைகள் என அனைத்து உணவு பொருட்களும் விளைவதோடு காவிரி பாயும் இடங்களில் நிலத்தடி நீரும் எளிதில் கிடைக்கும் பகுதியாக விளங்குவது தஞ்சை மாவட்டம் கண்டியூர் மேல திருப்பந்துருத்தி கீழ திருப்பந்துருத்தி பகுதிகளாகும்.
காவிரி நீர் பொய்த்து போனாலும் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செழிப்பாக நடைபெறும் பகுதியாகும், ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறுவதால் இந்தப் பகுதி எப்போதும் பசுமை நிறைந்த பகுதிகளாக காட்சியளிக்கிறது இந்நிலையில் இந்தப் பகுதி விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிடும் திட்டத்தை தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த வாரம் தொடங்கி வைத்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் பொறுப்பு அமைச்சர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை அழித்துவிட்டு புறவழிச்சாலை அமைப்பதாகவும் இதனால் சிறு விவசாயிகள் முதல் பெரும் விவசாயிகள் வரை அனைத்து தரப்பு விவசாயிகளின் நிலங்களை அரசு பறித்துக் கொள்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்.
நெல் தென்னை வாழை வெற்றிலை விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தங்கள் நிலத்தை பிடுங்கி விட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என அங்கலாய்க்கிறார்கள். திருவையாறு வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை அழைத்து கூட பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குமுறும் விவசாயிகள் பெற்ற பிள்ளையை குழி தோண்டி புதைப்பதை போல்,..
நெல் வயல்களை வாழை தோப்புகளை தென்னன் தோப்புகளை மண் கொட்டி அழித்து வருவதை பார்த்து கண்ணீர் வடிப்பதாகவும் கடந்த ஒரு வாரமாக தங்கள் பகுதிக்கு வந்த பொக்லின் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும்,
திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்தி போக்குவரத்தை சரி செய்ய மாற்று வழி இருந்தாலும் விவசாய நிலங்களை அழிப்பதிலேயே இந்த அரசு குறிக்கோளாக இருப்பதால் தங்கள் விவசாய நிலங்களை விட்டு தர மாட்டோம் பொக்லின் இயந்திரங்கள் நுழைந்தால் தங்கள் விளை நிலங்கள் அழிவதற்கு முன் தங்கள் உயிர்களை மாய்த்து கொண்டாவது விளை நிலங்களை பாதுகாப்போம் என தெரிவிக்கும் விவசாயிகள் இனி டெல்லியை போல் தஞ்சையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.