BREAKING NEWS

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

விரைவில் 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என ராமர் பிள்ளை.

 

ராஜபாளையத்தை சேர்ந்த மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தர விட்டுள்ளது. இதனால் அரசின் உரிய அனுமதியுடன் பெட்ரோல் தயாரித்து, விரைவில் 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என ராமர் பிள்ளை தெரிவித்தார்.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. கடந்த 2000 ஆவது ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இணையான மூலிகை திரவ எரிபொருளை கண்டுபிடித்து அதை விற்பனைக்கு கொண்டு வந்து சர்ச்சைக்கு உள்ளானவர். இவரது கண்டுபிடிப்பு மோசடி என புகார் எழுந்ததால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

அவ்வாறு உட்படுத்தப்பட்ட வழக்கில் ராமர் பிள்ளை மற்றும் அவரது மனைவி உட்பட ஐந்து பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு அவருக்கு 3 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராமர் பிள்ளை மேல் முறையீடு செய்தார். இந்த விசாரணை 23 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ராமர் பிள்ளை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என நீதிமன்றம் அவர் உட்பட 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

 

முடக்கப்பட்டு இருந்த ராமர் பிள்ளையின் வங்கி கணக்கை விடுவித்து, ஏற்கனவே அவர் கணக்கில் இருந்த சுமார் 4 லட்சம் ரூபாய்க்காக கடந்த 23 வருடங்களுக்கான வட்டியும் சேர்த்து வழங்க உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு குறித்து இன்று ராமர் பிள்ளை தனது வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். தொடக்கத்தில் வழக்கறிஞர் சொக்குசாமி பாலசுப்பிரமணியம் ராமர் பிள்ளை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்தும்,

 

காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்ட வழக்கில் இருந்து அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டது குறித்தும் விளக்கம் அளித்தார். பொருளாதார சிக்கல் காரணமாக 4 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு குறித்து விளக்கம் அளிப்பதாகவும்,

அரசு அதிகாரிகளையும், அறிவியல் விஞ்ஞானிகளையும் குற்றம் சாட்டி தீர்ப்பு வந்திருப்பதால் இந்த தீர்ப்பு குறித்த முழுமையான தகவலை வெளியிடாமல் அரசு அதிகாரிகள் முடக்கி விட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ராமர் பிள்ளை, அரிச்சந்திரனிடம் உண்மை இருந்ததால் அவருக்கு ராஜ்ஜியம் திருப்பி கிடைத்தது போல, என்னிடம் உண்மை இருந்ததால் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

தீர்ப்புக்கு பிறகு கடந்த 3 மாதங்களாக பெரிய அளவிலான தொழிற்சாலை அமைக்கவும், விற்பனைக்காக அரசிடம் அனுமதி வாங்கும் பணிகளும் நடந்து வருகிறது. 40 நாட்களுக்குள் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படும்.

உற்பத்தி மதிப்பில் இருந்து 200 மடங்கு விலை வைத்து வாங்க நிறுவனங்கள் தயாராக உள்ளது. அடுத்த முறை வியாபாரம் தொடங்கி விட்டது என்ற அறிவிப்பு வெளிவரும். கேரள விஞ்ஞானி நம்பி என்பவர் 30 வருடங்களாக போராடினார்.

 

நான் 23 வருடங்களாக போராடி வெற்றி பெற்றுள்ளேன். விரைவில் 15 ரூபாய்க்கு புகையில்லாத ஒரு லிட்டர் பெட்ரோல் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES
TAGS