யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்

இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்க தக்கதாகும்.
தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக செஞ்சி இருந்துள்ளது. மராட்டியர்களுக்கு முன்பே பல்லவர்கள், சோழர்கள், காடவாராயர்கள் உள்ளிட்ட பல தமிழ் மன்னர்கள் செஞ்சி பகுதியை ஆண்டுள்ளனர். மராட்டியர்களுக்கு பின்னர் முகலாயர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் செஞ்சிக் கோட்டையை பிடித்தனர்.
தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டையும் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னமாக மாறியுள்ளது.
உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து செஞ்சிக் கோட்டை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.