ரஞ்சிதமே பாடலுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு நாட்டியம் ஆடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு கலைஞர்.
ரஷ்யா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள கலாச்சாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த ரஷ்ய கலைஞர்கள் குழு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் சுற்று பயணம் செய்து பின்னர் தஞ்சாவூருக்கு வந்தனர். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த ரஷ்யா கலைஞர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள செல்பி பாயிண்ட்டில் அவர்கள் செல்பி எடுத்த மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடினர். விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இடம் பிடித்த ரஞ்சிதமே என்ற பாடலுக்கு திரைப்படத்தில் வருவது போன்று நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து பல்வேறு பாடல்களுக்கு ஆரவாரமாக நடனம் ஆடினர். முடிவில் ரஷ்யா கலைஞர்கள் அனைவருக்கும் மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மஞ்சப்பை அனைவருக்கும் பரிசாக வழங்கினார்.