ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தின் முன்பிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை கொடுத்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்னும் பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி. இதற்காக இன்று கன்னியாகுமரி வந்தடைந்தார் ராகுல் காந்தி. முன்னதாக சுவாமி விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு காந்தி மண்டபம் வந்தடைந்தார் ராகுல்.
காந்தி மண்டபத்தில் இசையஞ்சலி நடந்தது. இதிலும் ராகுலும், மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டனர். காந்தி மண்டபத்தில் பஜனை நிகழ்ச்சி முடிந்ததும் கதரால் ஆன தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் கொடுத்தார்.
ராகுல் அந்தக் கொடியைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து 600 மீட்டர் தொலைவில் இருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து வந்தார். ராகுல் காந்தியின் நடைபயண பொதுக்கூட்டத் தொடக்கவிழா மேடையில் மு.க.ஸ்டாலின் உள்பட மூன்று முதல்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய இந்திய ஒற்றுமைப் பயணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
150 நாள்கள் கொண்ட இந்த பயணம் 3500 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மொத்த பயணத்திலும் ராகுல் காந்தியுடன் இதில் 100 பேர் உடன் செல்ல உள்ளனர். மற்றபடி, ராகுல் பயணிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த, அந்த மாநிலங்களில் நடைபயணத்தின் போது பங்கேற்பார்கள்.