ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்திற்கு சென்ற தஞ்சாவூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் விபத்து ஏற்பட்டு நாக்பூரில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை பெயர் பொன்னுரங்கன். இவருக்கு இரு சகோதரர்கள். இவரது அண்ணனின் பெயர் சீனிவாசன். இவர் கடந்த 45 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்து வந்தார்.
இவர் தஞ்சை சேவாதள காங்கிரஸ் அமைப்பின் மாநகர செயலாளர் மற்றும் வார்டு தலைவராக உள்ளார். கட்சியினர் இவரை யாத்திரை கணேசன் என்று அழைத்து வந்தனர். இவர் குமரி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைபயணம் மற்றும் வேதாரணிய உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையில் பங்கு பெற்றார்.
இவர் இந்திய ஒற்றுமைக்காக தற்போது ராகுல்காந்தி நடத்தி வரும் நடைபயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபயணத்தின் போது சாலை விபத்தில் யாத்திரை கணேசன் பலத்த காயமடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து யாத்திரை கணேசன் உடலை அங்கிருந்து அவரது சொந்த ஊரான தஞ்சைக்கு கொண்டு வர காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்தாகூர், ஜோதிமணி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவரது உடலை சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்து வருவதற்காக அவரது சகோதரர்கள் 2 பேர் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். அவரது உடல் நேற்று இன்று தனி விமானம் அல்லது ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை வந்து சேரும் எதிர்பார்க்கப்படுகிறது.
பின்பு அவரது உடலுக்கு அஞ்சலி மற்றும் இறுதி சடங்கு அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி ட்வீட்;
யாத்திரை கணேசன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி அறிக்கை யாத்திரை கணேசனின் உயிருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமே செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்தவர்.
அவரது இறப்பு தாங்கிக் கொள்ள முடியாதது. பல்வேறு நடைப்பயணத்தில் பங்கு பெற்றவர். எனவே அவரது உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.