ராஜபாளையம் அருகே கல் தூண் மண்டபக் கோவிலில் ஆய்வு.
ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் காயல்குடி ஆற்றுப் பாலத்தின் ஓரத்தில் ஒரு கல் தூண் மண்டபம் காணப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்; ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் கந்தசாமி தலைமையில் கல்லூரியின் கலாச்சார பாரம்பரிய கழக மாணவ, மாணவியர்களுக்கு கோவிலின் வரலாறு எடுத்துரைக்கப்பட்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். முன்னாள் தாசில்தார் ஆதிநாராயணன், மகாத்மா காந்தி கல்லூரி முதல்வர் அழகர் மற்றும் செங்கல்வராயன் ஆகியோர் கொடுத்த தகவலின் படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, கல் மண்டப தூண்கள் மிக நேர்த்தியாக சிற்பக்கலை அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளது. கல்தூண் மண்டபத்தினுள் கற்களால் கட்டப்பட்ட கருவறை போன்ற அமைப்புடைய ஒரு அறையும் காணப்படுகிறது. உள்ளே உள்ள பீடத்தில் சிவலிங்கம் வைத்து வழிபடப்பட்டு வருகிறது.
கருவறையுடன் கூடிய வெளிச்சற்று பிரகாரத்தில் அபிஷேக நீர் வெளியேறுவதற்காக பிரநாளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் போன்ற மூன்று கட்ட அமைப்பில் காணப்படுகிறது. முன் மண்டபத்தில் எட்டு கல் தூண்களும் அர்த்த மண்டபத்தில் ஆறு கல் தூண்களும் ஆக மொத்தம் 14 தூண்கள் அமைந்துள்ள மண்டபமாக காட்சியளிக்கிறது.
அர்த்த மண்டப மேற்கூரை கற்களை கொண்டு சரிந்த நிலையில் அமைத்துள்ளனர். 14 தூண்களிலும் நான்கு புறங்களிலும் கீழ் மற்றும் மேல் பகுதியில் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அனைத்து தூண்களிலும் நாகப்பந்தம் காணப்படுகிறது. இதில் 12 ராசிகளுக்கான உருவங்களை சிற்பமாக இங்கு செதுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது நவகிரகங்கள், நாயன்மார்கள், மங்கையர்க்கரசி, சிவனடியார்கள், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், பேச்சியம்மன் கருப்பசாமி, அயாயனார், மதுரை மீனாட்சி, கஜலட்சுமி சூரியன், சந்திரன், சைவ குரவர்கள், ஆடல் சிற்பங்கள், கர்ப்பிணிப் பெண், ஆமை வடிவம், வாமனன், சங்கு, சக்கரம், வாயில் தூண்களின் இருபுறமும் துவார பாலகர்கள், புல்லாங்குழல் ஓதும் கிருஷ்ணன், கண்ணப்ப நாயனார், அன்ன வாகனத்தில் அமர்ந்து கொண்டு வில் அம்பு விடும் பெண் சிற்பம் போன்ற பல்வேறு சிற்பங்கள் அடங்கிய சிற்பக்கூடமாக காட்சியளிக்கிறது. பல்வேறு வகையான மீன் சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தின் பின்புறம் கட்டுமான கற்கள் கலைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் சரிந்த கட்டுமான கற்களை வைத்து கீழே மேடையாக அமைத்துள்ளனர். இன்னும் ஒரு சில கட்டுமான கற்கள் சுற்று பகுதியில் சிதறி காணப்படுகிறது. இக்கோவில் நாக முனிஸ்வர மாலைக்காரி அம்மன் என்றழைக்கப்பட்டு பொன்னுச்சாமிபாண்டியன் மற்றும் அவரது தாயார் பொன்னுத்தாய் ஆகிய இருவரால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் சிவகிரி ஜமீன் பகுதியை தங்களுக்கு வழங்கி உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். வெளி ஊரிலிருந்தும் தங்களின் குல தெய்வமாக இக்கோவிலுக்கு வந்து வணங்கி முடி எடுத்தல், காது குத்துதல், மற்றும் பொங்கல் வைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.
கல் மண்டபத்தை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரோட்டம் காயல்குடி ஆறாக பாய்ந்த தடம் இன்றும் காணப்படுகிறது. சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காயல்குடி ஆற்றையொட்டி கல் தூண் மண்டபக் கோவில் அமைந்துள்ளதால் அருகில் உள்ள கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது சுவாமி திருவீதி உலா வந்து காயல் குடி ஆற்றில் நீராடி இந்த கல் மண்டபத்தில் தங்கி பூஜை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதோடு இந்த வழியில் செல்லும் மக்கள் தங்கும் அன்ன சத்திரமாகவும் வழிபாட்டு தியான மண்டபமாகவும் இருந்திருக்கலாம். கல் மண்டபத்தின் அமைப்பைக் கொண்டு 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று பேராசிரியர் கந்தசாமி கூறினார்.
ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.