ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 9 வது நாளான இன்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 நாளான இன்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முளைப்பாரி வீதி உலா நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல, ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்றனர்.

இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்கியபடி கோயிலில் தொடங்கிய ஊர்வலம், பொட்டல் பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.