ரூ.150 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!

விருதுநகர் டாஸ்மாக் கோடவுனில் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க ரூ.150 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரையில் தலைமறைவாக இருந்த பிரேம்குமாரை(வயது 68), லஞ்ச ஒழிப்பு போலீசார்கைது செய்தனர்.
விருதுநகர் செல்வக்குமார். இவரது லாரியில் 1998 ஜன. 22ல் விருதுநகர் டாஸ்மாக் கோடவுனில் இறக்கிய மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க உதவியாளர் பிரேம்குமார் ரூ.150 லஞ்சம் கேட்டு வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 2008 அக். 15ல் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை உறுதி செய்து 2018 அக்.5ல் தீர்ப்பளித்தது.
இதன்பின் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 2019 செப்.30ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ஸ்ரீவில்லிப்புத்துார் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிரேம்குமாரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தது.
தலைமறைவாக இருந்த பிரேம்குமார் மதுரை வில்லாபுரத்தில் அவரது வீட்டில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.