லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உரம் ஏற்றிச் சென்ற லாரியில் கயிறு அவிழ்ந்து விழுந்து அருகே பைக்கில் சென்றவர் கழுத்தில் விழுந்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் முத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இன்று காலை 9 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக ஏரலுக்கு சென்றுள்ளார். அப்போது வெளியூரில் இருந்து ஏரலுக்கு உரம் ஏற்றி ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியை கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
ஏரல் பஜாரில் லாரி வந்தபோது லாரியில் இருந்த ஒரு உரமூட்டை கீழே விழுந்தது. இதனால் உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுகிறது. அந்த சமயத்தில் முத்து அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த கயிறு அவரின் கழுத்தில் விழுந்துள்ளது. இதில் முத்து தூக்கி எறியப்பட்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
