BREAKING NEWS

லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.

லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.

திருச்சி லால்குடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றம் (கோர்ட்) கடந்த 4 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்திற்க்கு மாத வாடகையாக ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், புதிய ஒருங்கிணைந்த கோர்ட் நீதி மன்றம் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை பார்த்து வந்தனர்.

 

இந்நிலையில், கடந்த 2019 ம் ஆண்டு செப். 30 ம்தேதி லால்குடி அருகே மாந்துறை பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 3.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை, அப்போதைய திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்த இடம் நீதிபதிகள் குடியிருப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான தகுதியான இடமாக இருந்தாலும், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால், அந்த இடத்தை பெறுவதில் பல சிக்கல் இருந்து வந்தது.

 

இரண்டாவது முறையாக திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிளாட் ஸ்டோன் தாகூர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆனால், புதிய ஒருங்கிணைந்த கோர்ட் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

 

இந்நிலையில், லால்குடி அருகே பூவாளூர் சாலையில் கிழக்கு பகுதியில் உள்ள 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, லால்குடி குற்றவியல் நீதிபதி ராஜ்குமார்(பொ), சார்பு நீதிபதி நசீர் அலி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அபிநயா ஆகியோர் நீதிபதி குடியிருப்புகளுடன் கூடிய
புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து, லால்குடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கோர்ட் மற்றும் திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் மாந்துறை பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆய்வின் போது, லால்குடி வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர் பத்மநாபன், பொருளாளர் சேவியர், இணை செயலாளர் லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS