வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் ஆங்காங்கே புறம்போக்கு நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
இந்நிலையில் வண்டறந்தாங்கல் கிராமத்தில் வீட்டுமனைகளை வாங்கும் பொதுமக்கள் தங்களது மனைகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடங்களை தங்களது பாத்தியத்தில் உள்ளதாக கூறி வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி கையொப்பமிட்டு சீல் போட்டு வைத்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதை கடந்த காலங்களில் பணிபுரிந்த விஏஓக்களும், தற்போது பணியாற்றும் விஏஓவும் தொடர்ந்து இந்த பணியை செய்து கணிசமான தொகையை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோன்று அருந்ததியர் மட்டுமே சொந்தம் கொண்டாடப்பட வேண்டிய, அனுபவிக்க வேண்டிய இடங்களை உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த ரெட்டியார், நாயுடு, முதலியார் போன்ற சாதியினர் அனுபவித்து வருகின்றனர்.
இது போன்ற பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் சட்டத்தை யாரும் மதிக்காமல் தங்கள் விருப்பம் போல அனுபவித்து வருகின்றனர் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது என்றே சொல்லலாம்.
இதனை பார்த்து தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் அதை பணமாக்கி தங்களது பாக்கெட்டை நிரப்பி கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
இதே நிலைதான் தொடர்ந்து நிலவி வருகிறது வண்டறந்தாங்கலில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி கடந்த வாரம் வண்டறந்தாங்கல் கிராமத்தில் ரவி என்பவரது மகன் அருண் என்பவர் 40 க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்து உள்ளார் அருண்.
இது குறித்து வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரி மற்றும் தாசில்தார் ஜெகதீஸ்வரன் (எ) ஜெகன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு கிடப்பது குறிப்பிடத்தக்கது.
இதை பொறுக்காத அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கிராமத்தில் பனை மரங்கள் பச்சை பசேலென வளர்ந்து இருந்ததை வெட்டி கடத்தியுள்ளதாக புகார் கொடுத்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட வருவாய் துறை அந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய மரமான பனை மரத்தை வெட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது வேலூர் மாவட்ட வருவாய்த்துறை.
பசுமை தீர்ப்பாயத்தில் புகார் கொடுக்கவும் கிருஷ்ணமூர்த்தி முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பனை மரத்தை வைத்து தமிழகத்தில் கள் இறக்கும் இயக்கம் என்று நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.
ஆனால் வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இது ஏனோ என்று தெரியவில்லை. இந்த கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இதற்கு குரல் கொடுப்பார்களா என்றும் தெரியவில்லை.
பச்சை மரத்தை வெட்டி கடத்தும் கும்பலை விட்டு விட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் பரிதாப நிலைமை வேலூர் மாவட்டத்தில் தான் நடக்கிறது என்று சொன்னால் அதுதான் மிகவும் கொடுமையிலும் கொடுமையாகும்.
ஆதலால் இதற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள் ஒரு விசாரணை கமிட்டி அமைத்து இந்த பச்சை பனை மரங்களை வெட்டியது யார்? கடத்தியது யார்? இதற்கு துணை போன அரசு அதிகாரிகள் யார்? யார்? என்று அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வண்டறந்தாங்கல் வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.
இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது மீண்டும் கிடப்பில் போடப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்