வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மே மாதத்திற்குள் 1 கோடி கடிதங்கள் தமிழக முதல்வரின் அலுவலகத்தில் குவிய வேண்டும் என பாமகவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சார்பில் தமிழக முதல்வருக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையருக்கும் கடிதம் அனுப்பும் அறம் போராட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம. கிருஷ்ணன் தலைமை தாங்கினார், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.
லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் வளாகத்தில் இருந்து காந்தி சிலை அருகே உள்ள தபால் அலுவலகம் வரை கட்சிக்கொடி ஏந்தி வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று பாமகவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் 300 கடிதங்களை தபால் பெட்டியில் போட்டு முதல்வருக்கும் , நீதியரசருக்கும் அனுப்பி வைத்தனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல், மாவட்ட அமைப்புச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் லோகநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல், நகராட்சி உறுப்பினர்கள் சாரதி, கோமளா, நகர செயலாளர் ஏழுமலை, நகர தலைவர் ஜெயசீலன், நகர துணைச் செயலாளர் ராமு, ஒன்றிய கவுன்சிலர் பாபு, மற்றும் மதன், கார்த்தி, சின்னப்பா, சேட்டு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.