வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து, மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தஞ்சை அருளானந்தம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்தனிஸ்லால். இவரது மனைவி ஆக்னஸ்மேரி (வயது 85). இவர்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ஸ்தனிஸ்லால் இறந்து விட்டதால் ஆக்னஸ்மேரி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மேல்மாடி அறையை வாடகைக்கு கொடுக்க முடிவு செய்து, வீட்டின் முன்பு அறிவிப்பு பலகை வைத்திருந்தார். வீடு வாடகைக்கு என்ற போர்டை பார்த்த 2 மர்ம நபர்கள் அங்கு வந்து ஆக்னஸ்மேரியிடம் வீடு வாடகைக்கு வேண்டும் என்றனர்.
இதையடுத்து ஆக்னஸ்மேரி மாடி அறைக்கு அவர்கள் இரண்டு பேரையும் அழைத்து சென்றார். அப்போது அந்த மர்மநபர்கள் திடீரென ஆக்னஸ்மேரியை நாற்காலியில் கட்டிபோட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆக்னஸ்மேரி திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார். சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என கத்தியை காட்டி மிரட்டினர். இதையடுத்து ஆக்னஸ்மேரியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின், 2 பவுன் வளையல், 1 பவுன் மோதிரம் என 5 பவுன் நகைகளை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த துணிகர செயலால் ஆக்னஸ்மேரி அதிர்ச்சியில் உறைந்தார். கயிறால் கட்டப்பட்டிருந்தால் அவரால் எழுந்திருக்க முடியாததால் சத்தம் போட்டார். இதைகேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கயிறை அவிழ்த்து விட்டனர். இது குறித்து அவர் தஞசை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.