‘வானில் நகரும் ரயில் பெட்டிகள்’ அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.
வானும் கடலும் அள்ளித்தரும் அதிசயங்களைக் கண்டுகளிக்க மனிதர்களின் வாழ்நாள் போதாது. அப்படி ஓர் அதிசய நிகழ்வை வானில் கண்டுகளித்திருக்கிறார்கள் லக்னோ நகரவாசிகள்.
உத்தர பிரதேசத் தலைநகர் லக்னோவில் வசிக்கும் மக்கள் நேற்று இரவு, வானைப் பார்த்தபடி அதிசயித்து நின்றனர். கருநீல வானில் வெண்ணிற வெளிச்சப் புள்ளிகள் மின்னியபடி வரிசையாக நகர்ந்து சென்றது லக்னோவாசிகளை ஆச்சரியத்திலும் அதேசமயம் குழப்பத்திலும் ஆழ்த்தியது.
உடனடியாக அந்தக் காட்சியைப் படமெடுத்து சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கும் பகிரத் தொடங்கினர். இதுபோன்ற தருணங்களில் வழக்கமாக நடப்பதுபோலவே ஆளாளுக்கு ஓரு கற்பனையைப் புகுத்தி அந்தக் காட்சிக்கு விளக்கம் தந்தனர் அல்லது குழப்பம் அதிகரித்தனர்.
சிலர் இது தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க்-51 செயற்கைக்கோள் இணையத் தொகுப்பு எனக் கணித்திருக்கின்றனர்.
‘எல்லாம் கடவுளின் செயல்’ என்று சிலர் பரவசப்பட, ஹாலிவுட் ஏலியன் படங்களைப் பார்த்த பாதிப்பில் இருக்கும் பலர் இது யூஎஃப்ஓ (அடையாளம் காண முடியாத பறக்கும் வஸ்து… சுருக்கமாக ‘பறக்கும் தட்டு’) எனப் பதிவிட்டனர்.
ஒருவர் வானில் நகரும் ரயில் பெட்டிகள் என ஒருவர் கவித்துவமாகக் கருத்து தெரிவித்திருந்தார். விஷய ஞானமுள்ள ஒருவர் நாசா, இஸ்ரோ, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுடன் உத்தர பிரதேச அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையையும் டேக் செய்து விவரம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
2021 ஜூன் மாதம் குஜராத்தின் ஜுனாகத், உப்லேட்டா மற்றும் செளராஷ்ட்ராவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படி வானில் விளக்குகள் மின்னும் காட்சியை மக்கள் பார்த்து அதிசயித்தனர்.
2021 டிசம்பரில் பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் இதேபோன்ற அதிசயக் காட்சி தென்பட்டது. அந்தத் தருணங்களிலும் ஆளுக்காள் வானில் வடை சுட்டு மகிழ்ந்தது தனிக் கதை!