விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் எஸ்.கே. அருமைராஜ் தலைமையிலான கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கொட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், கோவில்பட்டி அருகே பசுவந்தனையைச் சுற்றியுள்ள செவல்பட்டி, தீத்தாம்பட்டி, தொட்டம்பட்டி, அச்சங்குளம், கோவிந்தன்பட்டி, கைலாசபுரம், நாகம்பட்டி கிராம மக்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், தீத்தாம்பட்டி – பசுவந்தனை சாலையில் உள்ள மாந்தோப்பு விநாயகர் ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
தற்போது இந்த ஆலயத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி உள்ளிட்டோர் காவல்துறை உதவியுடன் இந்த கோயிலை முன்னறிவிப்பு இன்றி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவல்பட்டி கிராம மக்களை பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி மிரட்டி உள்ளனர். எனவே உரிய விசாரணை செய்து மீண்டும் அதே இடத்தில் கோயிலை அமைத்து தர உத்தரவிட வேண்டும். கோயிலை இடித்த நபர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அருமைராஜ் கூறுகையில்
மாந்தோப்பு விநாயகர் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வந்தோம். இந்த நிலையில் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக கோயிலை இடித்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் கோயிலுக்கும் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கிடைக்கும் இடையிலான தூரம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கேட்டுள்ளது. ஆனால் அதற்குள் இரவோடு இரவாக கோயில் இருந்ததற்கான தடயத்தை அழித்துவிட்டனர்.
கோயிலின் அருகே மாமரம் ஒன்று உள்ளது. இந்த மாமரத்தின் வயதும் கோயில் கட்டிய வருடமும் ஒன்றுதான். நூறு ஆண்டுகள் பழமையான கோயில். ஆனால் வருவாய்த் துறையினர் எங்களது ஆவணங்களில் இல்லை என்று கூறுகின்றனர். அரசு கோயில்களை தாரை பார்ப்பதும் இந்து கோயில்களை இடிப்பதையுமே வேலையாக வைத்துள்ளனர்.
ஏற்கெனவே மாந்தோப்பு விநாயகர் கோயிலில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. தற்போது இந்த பகுதியில் புதிதாக ஒன்று தொடங்க வேண்டும் என்பதற்காக கோயிலை இடித்துள்ளனர்.
இதேபோல் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட செண்பகவல்லி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் மதுபான பாருக்கு கொடுத்துள்ளனர். இதன் அருகே அங்கன்வாடி மையமும் உள்ளது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டுள்ளனர். ஆனால் இங்கு தாரை பார்க்கும் வேலையை செய்கின்றனர். எனவே, மீண்டும் அந்தக் கோயிலை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.