வேப்பூர் அருகே அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் – பயணிகள் அவதி
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் போக்குவரத்து பணிமனையில் இருந்து வேப்பூர்,திட்டக்குடி, நல்லூர், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், முதணை, நெ ய்வேலி, பெண்ணாடம் போன்ற பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கும் திருச்சி, சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர்,கடலூர், சிதம்பரம், சேலம், மதுரை போன்ற பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து கோமங்கலம், விளாங்காட்டூர், சாத்தியம், கண்டப்பன்குறிச்சி, நல்லூர், நகர், வழியாக சேப்பாக்கம் வரை வழித்தட எண் 22 என்ற பேருந்து இயக்கப்படுகிறது.
நாள்தோறும் காலை மாலை ஆகிய வேலைகளில் கிராமத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கிறது, இப்பேருந்து மூலம் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்பவர்களும், வெளியூர்களுக்கு செல்பவர்களும் இப்பேருந்தில் பயணிக்கின்றனர்.
ஆனால் இப்பேருந்து சரி வர இயக்கப்படாததாலும், சனி ஞாயிறு போன்று நாட்களில் பேருந்து கிராமத்துக்கு வருவதில்லை எனவும், அப்படி பேருந்து தினந்தோறும் வந்தால் கூட பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் அப்படியே செல்கிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலைகளுக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக இப்பேருந்தில் ஏறுவதற்காக பெருமளவு பெண்கள் நின்றால் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டி செல்வதை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பேருந்து சரிவர நிற்காமல் செல்வது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் குறித்த நேரத்தில் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்று செயல்படும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.