BREAKING NEWS

வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!

வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இரவு 11:15 மணியளவில், சின்னகோவிந்தம்பாடி பகுதி சாலையோரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த லாரி, காரை நோட்டம் பார்த்தனர். அப்போது நான்கு பேர்கொண்ட கும்பல் காரிலிருந்து லாரியின் கேபினுக்கு ஏதோ பண்டல்களை ஏற்றிக்கொண்டிருந்தது.

 

கேபினுக்கு ஏற்றப்பட்ட பண்டல்களை தார்ப்பாயைக்கொண்டு மூடினர். அவர்களுக்குள் ஒருவிதப் பதற்றமும், அவசரமும் காணப்பட்டதால் போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்தது.

 

இதையடுத்து, அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸார், ஒரு பண்டலைப் பிரித்துப் பார்த்தனர். அதில், கட்டுக்கட்டாக 500 ரூபாய்த் தாள்கள் இருந்தன.

 

மற்ற பண்டல்களிலும் பணம் இருப்பதாக அந்தக் கும்பல் தெரிவிக்கவே உடனடியாக லாரி, காருடன் மொத்தம் 48 பண்டல்களையும் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர்.

 

பிடிபட்ட நான்கு பேரையும் கஸ்டடிக்குள் கொண்டுவந்து தீவிர விசாரணைக்குட்படுத்தினர். அவர்களில் ஒருவர் சென்னை, மற்றொருவர் மதுரை, மேலும் இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

 

நான்கு பேரில், மூன்று பேர் ஓட்டுநர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். லாரி, கேரளா பதிவெண்கொண்டது.

 

கார் தமிழ்நாடு பதிவெண்கொண்டது. 48 பண்டல்களிலும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்கும் மேலான பணம் கட்டுக்கட்டாக இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

அந்தப் பணம் ‘ஹவாலா’ மூலம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

ஆனால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள், ‘இது, வருமான வரித்துறையினரிடம் கணக்கில் காட்டாத கறுப்புப் பணம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

 

 

இது குறித்து, எஸ்.பி ராஜேஸ்கண்ணனுக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, அவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடத்தி, பணத்தைப் பார்வையிட்டார்.

 

இதையடுத்து, பணம் எண்ணக்கூடிய ஒரு பெரிய மெஷின் மற்றும் இரண்டு சிறிய மெஷின்களைக் கொண்டுவந்து, ஒவ்வொரு பண்டல்களாகப் பிரித்து இன்று காலையிலிருந்து பணத்தை காவல்துறையினரே எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

பண்டல்களில் 500 ரூபாய் கட்டுகளாகவே இருப்பதாகவும், விசாரணைக்குப் பின்னர் முழு விவரங்களைத் தெரியப்படுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )