BREAKING NEWS

வேலூரில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.

வேலூரில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், மகளிர் திட்ட அலுவலர் அலுவலகம், கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர்கள் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

 

இங்குள்ள கூட்டரங்கில் கிராம ஊராட்சிகளில் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

 

 

இதில் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுத்து தங்கள் கிராம ஊராட்சியின் தணிக்கையை சரி செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் விஜய் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஊராட்சி செயலாளர்கள் தணிக்கையை சரி செய்வதற்காக லஞ்ச பணத்துடன் கூட்டரங்கிற்குள் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் துறை விஜய் தலைமையிலான குழுவினர் அதிரடியாக கூட்ட அரங்கிற்குள் நுழைந்தனர். அங்குள்ள கதவுகளை பூட்டி உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாதபடியும், வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடியும் செய்தனர்.

 

பின்னர் கூட்டரங்கில் இருந்த 49 கிராம ஊராட்சி செயலாளர்களிடம் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இதில் 13 கிராம ஊராட்சி செயலாளர்களிடம் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 600 இருந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு உரிய பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தணிக்கையை சரி செய்வதற்காக லஞ்சம் கொடுத்தார்களா? என்றும்,

 

 

கிராம ஊராட்சி செயலாளர்களிடம் வைத்திருந்த பணம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தணிக்கை செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளின் விவரங்கள் மற்றும் அவற்றின் கோப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு மற்றும் விசாரணை தொடர்ந்து 7 மணி நேரம் நடைபெற்றது. 13 ஊராட்சி செயலாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் கிராம ஊராட்சி செயலாளர்களிடம் இருந்து கணக்கில் வராத ₹ 1 லட்சத்து 25 ஆயிரத்து 600 ரூபாய் சிக்கிய சம்பவம் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS