வேலூரில் 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமலும் , அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையிலும் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


அதனைத் தொடர்ந்து, போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை மருத்துவப் பணிகள் இணை இயக்குநர்களுடன் இணைந்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள போலி மருத்துவர்கள் குறித்து மருத்துவப் பணிகள் இணைஇயக்குநர் கண்ணகி தலைமையில் அதிகாரிகளும், போலீஸôரும் வியாழக்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் ஸ்கூல்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் தயாளன்(74) என்பவர் பி.ஏ., பட்டப்படிப்பு படித்துவிட்டு நேதாஜிநகரில் கிளினிக் வைத்து 20 ஆண்டுகளாக அலோபதி மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இதேபோல், சத்துவாச்சாரி விஜயராகபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன்(59) அக்குபஞ்சர் ஆர்எம்ஓ படித்துவிட்டு தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து அலோபதி மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. உடனடியாக தயாளன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் சத்துவாச்சாரி போலீஸôர் கைது செய்தனர்.
