வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் உள்ள இவருக்கு திடீரென மூச்சு திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சிறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறை காவலர்கள் ராஜாவை அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா திடீரென இன்று வார்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய விசாரணை கைதி ராஜாவை காவலர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிய நிலையில் இதுவரை கிடைக்கவில்லை.
இதனை அடுத்து மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி ராஜா, மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் முதலாவதாக ஆட்டோவில் ஏறுவது போல் சென்று பின்னர் ஆரணி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் தப்பியோடிய விசாரணை கைதி ராஜாவை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சிறைத்துறை சார்பில் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.