வேலூர் மாநகராட்சி மேயர் வார்டு 31ல் பொதுக்கழிப்பறை இல்லாமல் பெண்கள் கடும் அவதி: அலட்சியம் காட்டும் மேயர் சுஜாதா!

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மேயர் சுஜாதாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கழிவறை இல்லாமல் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதை கண்டும் காணாமல் தெனாவெட்டாக விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மேயர் சுஜாதா. பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த பொது கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவாரா மேயர் என்பது இன்று விடை தெரியாத கேள்வியாக உலா வந்து கொண்டுள்ளது பொதுமக்களிடம்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முன்னா வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் 31வது வார்டு முள்ளிப்பாளையம், கோரிமேடு பகுதியில் பொதுகழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை சிதிலமடைந்தும், தண்ணீர் இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில், துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கவில்லை. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த வார்டு கவுன்சிலர் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா வார்டு ஆகும். திறந்தவெளி கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்துவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு சிதிலமடைந்த கழிப்பறையை இடித்துவிட்டு அடிப்படை வசதிகளுடன் புதிய கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முள்ளிப்பாளையம், கோரிமேடு பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் பணியை முடித்து கொடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவாரா? என்பது மேயர் சுஜாதாவுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
