BREAKING NEWS

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!

வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO வாட்டர் ) வழங்கும் இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்துள்ளது.

இது அசோக்நகர், V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி உள்ளது. இந்த இயந்திரம் வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஒவ்வொரு குடும்பத்தினரும் தினமும் தலா 20 லிட்டர் தண்ணீர் பிடித்து தங்களது அன்றாட உபயோகத்திற்கு பயன்படுத்தி பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பழுது நீக்கி மீண்டும் பொருத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து தராமல் அலட்சியத்துடனும், தெனாவெட்டுடனும் வேலூர் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் செயல்பட்டு வருகிறார் என்று அவரது 3வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகாரை அடுக்கடுக்காக கூறி வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் பழுதாகி கிடக்கிறது. இதனை சரி செய்ய கவுன்சிலர் தாமாக முன் வராததால் பொறுத்து பொறுத்து பார்த்த பொதுமக்கள் கவுன்சிலரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

பல முறை பொதுமக்கள் கவுன்சிலர் ரவிக்குமார், மாநகராட்சி அதிகாரிகள், நிழல் மண்டல குழு தலைவர் வன்னியராஜா ஆகியோரிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக திண்டாடுவதாக கூறுகின்றனர். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய கவுன்சிலர் யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் அமைதி காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரின்றி அமையாது உலகு என்ற ஔவையாரின் கூற்றுக்கு ஏற்ப பணி செய்ய யாரும் முன்வரவில்லை. தனிக்கவனமும் செலுத்தவில்லை.

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, காட்பாடி 1வது மண்டல குழு தலைவி புஷ்பலதா ஆகியோர் உடனடியாக இந்த RO பிளாண்ட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்படி பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாத கவுன்சிலர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த 3வது வார்டு பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS