வைகை அணை நிரம்பியது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக 50 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 70 அடியை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வினாடிக்கு 1190 கன அடி தண்ணீர் அப்படியே அணையில் உள்ள ஏழு பிரதான பெரிய மதகுகள் வழியாக உபரிநீராக திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரை வைகை நீர்வளத் துறையினர் திறந்து வைத்தனர்.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி வைகை அணையில் நீர் இருப்பு 5725 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் மேலும் அதிகரிக்க செய்யப்படும் என்று வைகை நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
