ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களில் இரண்டாவது சிறுவன் உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.
ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஹரிபிரசாத் என்ற சிறுவனின் உடல் மீட்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில், ஆச்சார்யா, ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற பெயரில் வேத பாடசாலையொன்றை பத்ரி பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த வேத பாடசாலையில் 10 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட 16 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு ரிக், யஜுர் வேதங்களும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் மன்னார்குடி, இராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இங்கேயே தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், அபிராம் என்ற நான்கு மாணவர்கள் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
இதில் எதிர்பாராத விதமாக நீர் சுழலில் சிக்கிய விஷ்ணு பிரசாத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நீச்சல் தெரிந்த கோபாலகிருஷ்ணன் நீந்தி கரையேறிவிட்ட நிலையில் ஹரிபிரசாத், அபிராம் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோட்டார் படகு உதவியுடன் அவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் இறந்த விஷ்ணு பிரசாத் உடலை மீட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு விசாரணை நடத்தினார். இந்த விபத்து தொடர்பாக பாடசாலை நடத்தி வரும் பத்ரி பட்டரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை ஐந்து முப்பது மணியிலிருந்து நேற்று இரவு ஏழு மணி வரை ஆற்றல் அடித்து செல்லப்பட்ட இரண்டு நபர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர்.
கொள்ளிட ஆற்றில் வரக்கூடிய தண்ணீரின் அளவை முக்கொம்பு மேலெனையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஏழு மணி முதல் இருட்டின் காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது இன்று அதிகாலை முதல் இரண்டாவது நாளாக ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருமானூர் வரை இரண்டு சிறுவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
சிறுவன் உடல் மீட்பு
இந்நிலையில் திருச்சி கொள்ளிடம் பகுதியில் அதாவது சிறுவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற சிறுவரின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட தீயணைப்புத்துறை கண்காணிப்பு அலுவலர் அனுசியா, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்து உள்ளது, மேலும் அபிராம் என்ற நீரில் மூழ்கிய மற்றொரு சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.