ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த மனவருத்ததில் இருந்து வந்ததாகவும், ஒருநாள் அவரது கனவில் கிருஷ்ணர் மற்றும் ஐயப்ப ஊர்வலம் சாலையில் வந்து கொண்டிருந்ததாகவும்,

ஊர்வலத்தில் வந்த ஐயப்பன் சிலையை மனம் உருகி வணங்கிய போது ஒளி வடிவத்தில் அசிரீரியாக தோன்றிய ஐயப்பன் மாதனூர் அடுத்த ஆர்.பட்டி அருகே உள்ள சாஸ்தாமலை அடிவாரத்தில் குடியிருப்பதாகவும், தன்னைத் தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் பசிப்பிணியை போக்கி அருள வேண்டும் எனவும் கனவில் அசிரீதியாக தோன்றி கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி(பாலூர் ஆர்-பட்டி) மக்களின் உதவியுடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக சாஸ்தா மலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் கனவில் ஐயப்பன் கூறியதாக கூறப்படும் இடத்தை வாங்கி அந்த இடத்தில் கோவிலை எழுப்பி பஞ்சலோகத்தில் ஆன ஐயப்பன் சிலை வாங்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களில் பூஜிக்கப்பட்டு பின்னர் கோவில் சன்னிதான மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டு வணங்கி வருகின்றனர்.
கோவிலின் வெளிப்புறத் தோற்றம்:

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் சன்னதியை போலவே கிழக்கு திசையை நோக்கி ஐயப்பன் அமர்ந்துள்ளார். வலது புறத்தில் மணியும் இடதுபுறத்தில் விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு நேர் எதிரே சபரிமலை சன்னதியில் உள்ளது போலவே 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாலை அணிந்து இருமுடி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த 18 படிகள் வழியாக ஏறி வந்து ஐயப்பனை காண அனுமதிக்கப்படுகிறது. மற்ற பக்தர்கள் கோவிலின் மேற்கு திசையில் உள்ள சாதாரண படிகள் வழியாக ஏறி வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவிலில் உள்ள பிரதான சுவாமி மற்றும் கோவில் பிரகாரத்தில் உள்ள மற்ற சுவாமிகள்:
கோவிலின் மூலவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் மூலவரின் வலது புறத்தில் விநாயகருக்கு பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடது புறத்தில் மஞ்சமாதா தேவியும் தனிப்பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 18 படிகளின் இருபுறங்களிலும் பெரிய கருப்பு மற்றும் சின்ன கருப்பு கருப்பாயி ஆகியோர் காவல் தெய்வங்களாக கையில் அரிவாளுடன் நிற்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வந்தால் பார்க்க வேண்டிய இடம்:
18 படிகளுக்கு செல்லும் வழியில் பந்தள ராஜா ஐயப்பனை காட்டிலிருந்து கண்டறிந்து தத்தெடுப்பது போன்ற காட்சிகள் சிலை வடிவத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் :

கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து இருமுடி செலுத்தி நெய்யபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். மேலும் குழந்தை வரம் வேண்டி கோவில் குளத்தில் குளித்து தல விருட்சத்தில் தொட்டில் கட்டி குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையின் எடைக்கு நிகரான பணத்தை துலாபாரத்தில் எடைக்கு எடை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோவிலின் முக்கிய விழாக்கள்:
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. தை மாதம் மகர சங்கராந்தி அன்று நடக்கும் மகரஜோதி தரிசனம், சித்திரை விஷூ போன்ற விழாக்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மண்டல கால பூஜை நடைபெறுகிறது. மேலும் மண்டல நாட்களில் நாள்தோறும் 18 ஆம் படி பூஜை நடைபெறுகிறது.

இதே போல் நேற்று நடைப்பெற்ற மகர விளக்கு பூஜையில் மாதனூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் பட்டாடைகள் திருவாபரணப் பெட்டியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் கோவிலின் அருகே உள்ள 1500 அடி உயரம் கொண்ட சாஸ்தா மலை உச்சியில் மாலை 6:35 மணி அளவில் 18 படிகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பின் மூலவருக்கு தீபாரத்தி காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து. 6.40 மணியளவில் சாஸ்தா மலையின உச்சியில் மகரஜோதி விளக்கு தரிசனம் நடைபெற்றது.

சபரிமலையில் மகர விளக்கு பூஜை அன்று பொன் ஆபரண பெட்டி ஊர்வலம் நடைபெற்று பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தோன்றுவது போலவே மூன்று முறை இங்கும் மகர விளக்கு தரிசனம் நடைபெற்றது.

மேலும் எந்த ஐயப்பன் கோயிலிலும் இல்லாத ஒன்று இத்திருக்கோவிலில் பெண்களுக்கும் மேற்கு புற வாயில் வழியாக வந்து ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது அனைவருக்கும் ஐயனை தரிசிக்கலாம் என ஆண்கள் மட்டுமின்றி குடும்பத்துடன் வந்து தரிசித்து செல்கின்றனர்.
