11,486 உரக்கடைகளில் உரம் பரிசோதனை செய்ததில், இதுவரை 432 உரங்கள் தரமில்லாததாக கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் பேட்டி.

நடப்பாண்டு சாகுபடி கடன் 12,000 கோடி வழங்க இலக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குறுவை சாகுபடி குறித்து பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக அரசு தேவையான விதை நெல், உரம் ஆகியவை கொள்முதல் செய்துள்ளது. கூடுதலாக தேவைப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுள்ளதாக தெரிவித்தார். மேலும் 7,245 உராக்கடைகளில் நேரடியாக துறை அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 11,486 கடைகளில் உரம் பரிசோதனை செய்ததில், இதுவரை 432 உரங்கள் தரமில்லாததாக கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, இந்த ஆண்டு சாகுபடி கடன் 12,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு எளிய முறையில் கடன் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலங்களில் விவசாயிகளின் இல்லத்திற்கே சென்று கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
