17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி சீனிவாசன். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் மீது திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்க அப்போது சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய செல்வராஜ் என்பவர் 6000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார் புகாரை தொடர்ந்து ஆய்வாளர் செல்வராஜ் சீனிவாசன் இடமிருந்து லஞ்சம் பெற்ற போது அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான போலீசாரிடம் அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
இந்த வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் லஞ்சமாக பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000 அபராதமும்,
அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.