40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

வண்டறந்தாங்கள் நரிக்குறவர் குடியிருப்பு அருகில் அருந்ததியினருக்கு சொந்தமான இடத்திலிருந்த 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மனம் படைத்த நபர் மீது கைது நடவடிக்கை பாயுமா? அருந்ததியின மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கள் அடுத்துள்ள நரிக்குறவர் குடியிருப்பு அருகில் அருந்ததியின வகுப்பைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடம் சுதந்திரம் அடைந்தபொழுது கிருஷ்ணமூர்த்தி என்பவரது பாட்டனாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வெகுமதியாக கொடுத்த இடமாகும்.
அதனை ரவி என்பவரது மகன் அருண் என்பவர் ஜே. சி. பி., மூலம் 40-க்கும் மேற்பட்ட பனை மரங்களை அதுவும் பச்சை பனை மரங்களை உயிரோடு வெட்டி சாய்த்து அதனை அகற்ற முடியாமல் அங்கேயே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
ஆனால் அந்த பனை மரங்கள் எரிந்தும் எரியாமலும், அப்படியே அழியாமலும், அப்படியே அடையாளமாக கறிக்கட்டைகளாக காட்சி கொடுத்துக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெட்டியார் வகுப்பைச் சார்ந்த அருண் என்பவர் அருந்ததியினருக்குச் சொந்தமான இடத்தை ஆட்டையை போட்டு தன் வசப்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வருவாய்த்துறை அருணுக்கு வெண்சாமரம் வீசுகிறது.
கிருஷ்ணமூர்த்தி
ஏதோ ஆடு மேய்க்கும் கிருஷ்ணமூர்த்திக்கு யாரும் உதவி செய்ய முன் வரவில்லை என்பது இதற்கு சாட்சியாகும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வண்டறந்தாங்களில் தற்போதுள்ள விஏஓ இளங்கோவுக்கு முன்பிருந்த விஏஓவான நிவேதாகுமாரி (தற்போது சேவூர் விஏஓ) கண்டும் காணாமல் இருந்துவிட்டு அந்த அருணிடம் ரூபாய் 5 லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு சத்தம் போடாமல் இடத்தை காலி செய்து கொண்டு சென்று விட்டார்.
அதற்குப் பிறகு வந்த தற்போது பணியாற்றும் இளங்கோவும் கண்டும் காணாமல் பச்சை மரங்களை வெட்டி அதுவும் பனைமரங்களை வெட்டி பெட்ரோல் ஊற்றி எரியூட்டியவர் மீது இதுநாள் வரை வருவாய்த் துறையில் ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யாமல், கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வருவாய்த்துறை தனது கடமையைச் செய்யாமல் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது.
ஒருபுறம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானும் பனைமரத்துக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குரல் கொடுக்கின்றனர், நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டி வருகின்றனர்.
ஆனால் காட்பாடி வட்டத்தில் வண்டறந்தாங்களில் 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அதுவும் பச்சை பனை மரங்களை வெட்டிய நபர்கள் மீது இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது, வெட்கக்கேடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் வருவாய்த் துறையில் உள்ளவர்கள் இந்த பனைமரங்களை வெட்டி சாய்க்கப்பட்ட பிரச்சனையில் தலையிடாமல் அமைதி காக்கின்றனர் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது.
மாவட்ட ஆட்சியராவது இந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு உண்மை என்னவென்று அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று பச்சை பனை மரங்களை வெட்டி சாய்த்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த அருண் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றும்,
தனது பாட்டனார் பெயரில் உள்ள சொத்தை அபகரித்து அருண் எடுத்துக் கொண்டார் என்பதை பலமுறை திங்கள்கிழமைகள் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தும் கிருஷ்ணமூர்த்திக்கு இதுநாள் வரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.
நாட்டில் நீதி, நியாயம், நேர்மை இறந்து விட்டதா? என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பச்சை பனை மரங்களை வெட்டியதோடு நிறுத்தாமல் அந்த பனை மரங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த அருண் போன்ற அரக்கன் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வருவாய்த் துறையும்,
தமிழக அரசும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விசாரணையை நடத்தி அது உண்மையென தெரியவரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, உண்மையான நிலத்துக்குச் சொந்தக்காரரான கிருஷ்ணமூர்த்திக்கு அந்த இடத்தை மீட்டுத் தரவும் தமிழக அரசு முன்வர வேண்டும். பனை மரங்களுக்காக குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான், காட்பாடியில் இப்படி 40-க்கும் மேற்பட்ட பச்சை பனை மரங்களை வெட்டி எரித்த நபரை கைது செய்யச் சொல்லி தனது கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவாரா?
என்பதையும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இனி சீமானின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும், தமிழக அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். அதுவரை நாம் பொறுத்திருப்போம்.
“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்