வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில்…

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள வரலாற்றச்சான்றுகளோடு வரலாறு பேசும் வீரசோழீஸ்வரியம்மன் திருக்கோயில் ‘பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூ ராங்கண் கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின் உதிய னட்டில் போல’ வீரசோழபுரம் என்பது, பின்னரே இது ‘குழுமம்’ என்று பெயர் மாறி நாளடைவில் ‘கொழுமம்’ என்று பெயர் பெறுதற்காயிற்று.
மற்றும் இவ்வூருக்கு சோழன் பெருவழி, சங்கிராமநல்லூர், விக்கிரம சோழநல்லூர், வீரநாராயண நல்லூர், கேரளகேசரி நல்லூர், உமாபரமேஸ்வரி நல்லூர், கீழ்க்கல்லாபுரம், திருவளர்துறை, அகரம்புத்தூர், தெண்ணூர் என்ற பெயர்களும் வழங்கியதாக அறியப்படுகின்றது.
அழிந்து போன அவ்வூர் சதுர்வேதி மங்கலம், மாதவசதுர்வேதிமங்கலம், விக்கிரம சதுர்வேதி மங்கலம். உலகுடைய பிராட்டியார் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களைப்பெற்று அந்நதரண் அக்கிரகாரங்களாக விளங்கிக் கொண்டிருந்தன.
கொழுமத்தில் கோயில் கொண்டருளும் மூர்த்திக்குச் சோழீச்சுரர், சோழீச்சுர தேவர், சோழீச்சுர முடையார், வீதிவிடங்க நாயனார், நித்தியப்பர் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. சோழீச்சுரர் என்பது பாண்டீச்சுரர், கொங்கீச்சுரர், பட்டீச்சுரர், கோட்டீச்சுரர், தாண்டீச்சுரர்’ என்று வழங்கப்பெறும் பெயர்களில் ஒன்றுப்போன்றது.
சோழீச்சுரர் என்றால் சோழனால் பிரதிட்டிக்கப்பெற்ற மூர்த்தமென்பது பொருள். அச்சோழன் கொங்கு நாட்டில் கி.பி. 1118 ஆம் நூற்றாண்டின் சோழ சிங்காதனத்திலமர்ந்து திருமுடிபுனைந்து கொண்ட சோழ பெயரினானவன். இச்செய்தி 1909 ஆம் ஆண்டு 437 ஆம் நெம்பர் கல்வெட்டில் மேற்குறித்த வீரசோழன் தன் ஜன்ம நட்சத்திரத்தில் எற்பட்ட சூரிய கிரகணகாலத்தினல் சிவலிங்கத்தை வேதகாகம விதிப்படிபிரதிட்டித்து மூர்த்தத்திற்குத் தன் பெயர் விளங்கச்’சோழீச்சுரர்’ என்று பெயரிட்டானென்று கூறப்பட்டுள்ளது.
குதிரையாற்றின் கிழக்குக்கரை மேட்டில்தான், பழைமையான கொழுமம் இருந்த தென்றும், ஒரு காலத்தில் அம்மேட்டிற்குச் சுமார் அரை மைல் தூரத்தில் உள்ள தேவடியாள் குளம் பெரு வெள்ளத்தால் உடைப்பெடுத்து, ஊரை அழிவுபடுத்தியதென்றும்,, அதுகொண்டே ‘கொழுமம் குளத்தோடும், குமரலிங்கம் ஆற்றோடும்’ என்று கூறும் வட்டார வழக்கு பழமொழி வழங்கத் தொடங்கியதென்றும், ஊரார் கூறுகின்றனர் வீரசோழீஸ்வரி அம்மன் இது கொழுமத்திற்குத் தென்கிழக்கில் நஞ்சை நிலத்தில் இருக்கிறது.
சிற்றாலயம், தேவி வடக்கு நோக்கிக் கோவில் கொண்டருள்கின்றனர். ஆண்டு தோறும் தை மாதத்தில் இத்தேவிக்கு விழாக் கொண்டாடி கிராமத்தார் கொடை செலுத்துகின்றனர். இத் தெய்வம் ஊரார் மதிப்புக்குப் பெரிதும் பாத்திரமாயிருக்கிறது. இக் கோயிலுக்கு அருகில்தான் ‘முத்துகுளம்’ என்ற பெயரில் பெரியதோர் ஏரியுமுளது.
இதை வீரசோழியம்மன் என்று அழைக்கின்றனர். இக்கற்சிலையில் அடிப்பாகத்தில் ஒரு அசுரனை ஆக்ரோசத்துடன் காலால் மிதிப்பது போன்று எட்டு கைகளுடன் மார்பில் அலங்காரக் கச்சை இல்லாமல் வடிவமைத்து.
இருப்பதால் அண்ணாமலை உடனுறை உண்ணாமலையம்மன் அல்லது அசுரவதம், நிசும்பு சூதனி, மகிசாசுரமர்த்தினி, வீரசோழியம்மன் என்றும் வழங்கப்படுகிறது.
இது 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழன் காலத்தில் சங்கிராமநல்லூர் வீரசோழீஸ்வரர் திருத்தலம் கட்டும்போது இந்தக் கோயிலும்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை வீரசோழன் குலதெய்வமாக வழிபடுவதற்காக அப்போது ஊரின் மையப்பகுதியில் கட்டப்பட்டது.
கொழுமம் குளத்தோடும் குமரலிங்கம் ஆற்றோடும் எனும் பழமொழிக்கேற்ப இந்தக்கோயிலின் தென்கிழக்கில் (கீழான தாழ்வான பகுதியில்) கொழுமம் எனும் ஊர் இருந்ததென்றும் முத்துக்குளம், கோதையம்மன் குளம் உடைந்து பழைய கொழுமம் ஊர் அழிந்துபட்டது என்றும் அதற்குப்பிறகு இடம்பெயர்ந்து தற்போதைய கொழுமம் எனும் பகுதிக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது மக்கள் இருந்த இடத்தில் குளத்தின் மேடான பகுதியில் இந்த வீரசோழியம்மன் திருக்கோயில் இருந்ததால் சேதாரம் ஏற்டாமல் இன்று வரை பொதுமக்களின் வழிபாட்டிலும் பாதுகாப்பிலும் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் தற்போது இந்தக்கோயிலும் வீரசோழீஸ்வரர் திருக்கோயிலோடு கட்டுப்பட்டது எனவும் அந்தக் கோயிலும் அரசு ஏற்று நடத்தவும் வேண்டுகை விடப்பட்டதாக அங்கிருக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தக் கோயிலுக்கு தனியார் ஒரு சிலர் ஆர்வத்தின் பேரில் ஒரு கால பூசையும், அமாவாசை, பௌர்ணமி போன்ற விஷேசமானநாட்களில் பூசைகள் நடத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியிருப்பினும் சுமார் 800 ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட வீரசோழன் காலத்தில் கட்டப்பட்ட வீரசோழியம்மன் திருக்கோயிலை இன்றுவரை பொதுமக்கள் பாதுகாத்து வழிபட்டு வருவது போற்றத்தக்க செயலாகும். மேலும் அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் வசிக்காவிட்டாலும் அது இன்னமும் அரசு ஆவணங்களில் வீரசோழபுரம் என்றும் அந்தக் கரை வழி வீரசோழபுரக் கரை வழி வழங்கப்படுகிறது.
வீரசோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு கோயிலை பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர், முனியப்பன், வரலாற்றுத்துறை பேராசிரியர் திரு. செ.ராபின், பாரதியார்நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமிஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மேற்காண் செய்திகளை ஆவணப்படுத்தினர்.