BREAKING NEWS

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! பூக்குழி இன்று மாலை நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து வந்த 9 நாட்களும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் திருவிழா கொண்டாடப்பட்டது.

பல்வேறு அலங்காரங்களில் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல் சப்பரம், பூச் சப்பரம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இன்று மாலை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதலே கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

பிற்பகலில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. 4 மணிக்கு பின்னர் அம்மன் சப்பரம் பக்தர்கள் படை சூழ பூக்குழி திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு நடந்த வழிபாட்டுக்கு பிறகு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது அவ்விடத்தை சுற்றி நின்ற சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து ராஜபாளையத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

காவல் துறையினர், தீ அணைப்பு துறையினர், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சங்கரன் கோயில் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்

CATEGORIES
TAGS